எங்க ஊர் வெம்பூர்




              எங்கள் ஊர் பற்றிய ஞாபகங்கள், மன்னார் வளைகுடாவின் பவளப் பாறைத்திட்டுகளாக எனக்குள் எனது ஆழ்மனம் மேல்மனம் 
எல்லாவற்றிலும் நிறைந்து கிடக்கின்றன. சதா எனக்குள் குமிழியிட்டுக் கொண்டிருக்கும் எங்களூர், நான் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருநகரங்களின் பேரிரைச்சலில் அழிந்துவிடாமல், தொடர்ந்து ஒரு ஈர மனிதம் நிரம்பியவனாக என்னை நிலைநிறுத்திக் கொள்வதில் முக்கியப் பங்குகொள்கிறது. எனது ஒவ்வொரு கவிதையும் ஊரின் ஏதோ ஒரு புள்ளியைத் தொட்டுக் கொண்டிருப்பது என்னை அறியாமலே நடக்கிறது எனினும் அதை நான் விரும்பவே செய்கிறேன்.

                 ஊரின் கண்மாய், புறப்படத் தயாராக நிற்கும் புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்திண்ணி வவ்வால்கள் நிரம்பிய அத்தி,அரசமரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங்கன்னிகள், பாம்புகள் நெளியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார் போன்ற நூறு வயதை எட்டிய எனது மூத்த நணபர்கள்நெஞ்சுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரியகார்த்திகை, ஊர் முழுதும் கூடி ஆலமரங்களின் அடியில் அமர்ந்து பலவகைக் கஞ்சிகளைக் குடிக்கும் வடக்கத்தியம்மன் கஞ்சி, சேத்தாண்டி வேஷம் போட்டு ஆகோ அய்யகோ போகும் உத்தண்டசாமிகோவில் பங்குனிப் பொங்கல் போன்ற எங்கள் எளிய திருவிழாக்கள் என்று பக்கம் பக்கமாக ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு எழுத வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. இருபது வயது வரையிலான எனது பால்யம் மற்றும் இளம்பருவம் முழுவதையும் கட்டமைப்பதில் எனது ஊருக்கு பெரும்பங்கு இருந்திருக்கிறது. வாழ்வின் வசீகரம் மீதான பெருவிருப்பம், பொருளாதாரம் மற்றும் சாதியம் முதலான எல்லாவகை ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற லட்சியம், புத்தகங்களைத் தேடித் தேடி வெறிபிடித்து அலைந்த இனம்புரியாத அகத்தாகம், சொந்தக் குடும்பத்தின் கடைசி உத்திரங்களும் கரையான் அரித்துக் கொண்டிருந்த சோகம் என பெரும்கொந்தளிப்பு மிக்க எனது இளமையை ஊர்தான் தாங்கிக்கொண்டது. எனவேதான் ஊரின் மீதான மாயக்காதல் இன்றும் முடிந்தபாடில்லை. இப்படி இதுவரை எங்கள் ஊரை உணர்வுப்பூர்வமாகவே அணுகியிருக்கும் நான் இந்தக் கட்டுரையில் கொஞ்சம் புறவயமாக ஊரை அணுகலாம் என்று நினைக்கிறேன்.

                எங்கள் வெம்பூர் சுமார் 600 வீடுகளும் 2000 ஜனத்தொகையும் கொண்ட பெரிய கிராமம். எங்கள் ஊரின் வரைபடத்தைப் பார்த்தாலே எங்கள் ஊர் பற்றிய சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளலாம். எங்கள் ஊரைப் புரிந்து கொண்டாலே, கிராமப்புறங்களில்தான் இருக்கிறது என்று கூறப்படுகிற நமது இந்தியாவையும் புரிந்து கொண்டுவிட முடியும் அல்லவா?

                எங்கள் வெம்பூர், எட்டையபுரம் வட்டத்தில், மதுரை-தூத்துக்குடி  நால்வழிச்சாலையிலிருந்து இடதுபுறம் உள்ளே ஒரு அரை கிலோமீட்டர் ஒதுங்கியிருக்கிறது. இதனாலேயே தங்க நாற்கரம் எனப்படும் இராட்சஸ அனகொண்டாப் பாம்பிடம் சிக்கி தரைமட்டமாகிவிடாமல், ஊர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டது. தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட கிராமம் என்று பெருசுகள் பெருமையடித்துக் கொள்கின்றன. நெடுஞ்சாலையிலிருந்து ஊர் செல்லும் ஓடைப்பதை இப்பொழுது நகர்ப்பேருந்துகள் செல்கிற சிறுதார்ச்சாலை ஆகிவிட்டது. இருபுறமும் ரயில்கள்ளிகள் பேய்களைப்போல நிற்கிற, பகலிலும் சிள்வண்டுகள் கத்துகிற பீதியூட்டுகிற அந்தப் பழைய ஓடைப்பாதையை எல்லோரும் மறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஓடைப்பாதையின் இடதுபுறம், தனியாகப் பெண்கள் செல்கையில் தொம்தொம்மென்று பேய்கள் குதிக்கிற பாழுங்கிணற்றின் கரையில் ஒரு பெரிய செல்கோபுரம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறது. ஓடைக்கு வலதுபுறம் இருந்த கொட்டாரம் இப்பொழுது இல்லை. கொட்டாரம் என்பது மாடுகளுக்கான தீவனமான சோளநாற்றை (சோளம் விதைக்கும்போதே விதைச்சோளத்தை நெருக்கி ஊற்றிவிடுவார்கள். ஒட்டி ஒட்டிப் பிறந்து நெருக்கமாக வளரும் சோளம் முழுக்கதிர்விட முடியாமல் சிறுசிறு கதிர்களோடு நாற்றாகவே நின்றுவிடும். ஆண்டு முழுவதும் மாடுகள் விரும்பி உண்கிற உணவு இது.) கூரை வேயப் பயன்படும் முற்றிய சோளத்தட்டைகளை கம்மந்தட்டைகளை மழைவெயிலால் பாதிக்கப்படாதபடி பக்குவமாக சேமிக்கப்பட்டிருக்கும் செவ்வகக் கோபுர வடிவிலான படப்புகள் நிறைந்ததுதான் கொட்டாரம். இப்பொழுது ஊரில் கொட்டாரமும் இல்லை மாடுகளும் இல்லை. முன்பு கேரளாவுக்கு மெலிந்த வெட்டுமாடுகளை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்த அதே லொரிகளில் இப்பொழுது இந்த சோளத் தட்டைகளையும் அனுப்பிவிடுகிறார்கள். முழுச் சாலையையும் மறித்தபடி வரும் இந்த லொரிகளை நீங்கள் செங்கோட்டை கொல்லம் சாலைகளில் அடிக்கடி பார்க்க நேரிடலாம்.

               ஊரின் அமைப்பைப் பார்த்தாலே, எப்படி நாம் மிக மிக வெளிப்படையாக ஒரு சாதிவாரியான சமூகமாக  இருக்கிறோம் என்பது நமக்கு மிக எளிதாகப் புரிந்துவிடும். இணைப்புச் சாலை முடிந்தவுடன் முதலில் வருவது உத்தண்டசாமி கோவில், இதன் மூலக்கோவில் மதுரை விமான நிலையத்தை அடுத்து இருக்கிற வலையங்குளம் கருப்பசாமி கோவில்தான். அங்கிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துவந்து எங்களூர் உத்தண்டசாமி கோவில் நிறுவப்பட்டது. இந்தக் கோவிலை நிறுவியவர்கள் ஊரின் பெரும்பான்மை சாதியரான கவுண்டர்கள் என்பதால் அந்தக் கோவில் சார்ந்த திருவிழாக்கள், பூசாரியை நியமிப்பது முதலான எல்லா நடவடிக்கைகளிலும் கவுண்டர்களின் ஆதிக்கம் இருந்ததில் தவறில்லை என்பதில் ஊருக்கு ஆக்கபூர்வமானதொரு மொத்தக் கருத்து இருந்துவருகிறது. ஊருக்குள் நுழைகிற/வெளிவருகிற அனைத்துச் சாதியினரும் அவசர அவசரமாகத் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு ஒரு கும்பிடு போட்டுச் செல்வது பழகிப்போன பழக்கமாகியிருந்தது. பெரிய மீசையோடும் திறந்த உருண்டைக் கண்களோடும் இருக்கிற உத்தண்டசாமியைப் பார்த்தாலே பயமாக இருக்கும். இதில் வேறு அவர் ராத்திரிகளில் குதிரையில் சாட்டையைச் சுழற்றியபடி ஊரைச் சுற்றி வருகையில் எதிர்ப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து நிறைந்த கதைகள் நிறையக் கேள்விப்பட்டிருப்பதால் இரவு நேரங்களில் அந்தக் கோவிலை நெருங்குகையில் திக்திக்கென இருக்கும். தனிமனிதர்களின் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கும் நோக்கில் இப்படிப்பட்ட கதைகளையும் பெருசுகள் உலவவிட்டிருக்கக் கூடும். இத்தகைய பூடகமான அதீதக் கலாச்சாரக் கட்டமைப்புகள் மூலம் ஓர் உளவியல் சிகிச்சை ஆதி சமூகங்களில் வெகு இயல்பாக நடந்திருக்கிறது. ஆனால் கோவிலை ஒட்டிக் குடிசை அமைத்துத் தங்கியிருந்த நொண்டிக் கோடாங்கியின் அட்டூழியங்களைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது உடுக்கு இசைக்கு யாராவது ஒரு பெண் தினமும் பேயாடிக் கொண்டு இருப்பார். நொண்டிக் கோடாங்கிக்கு உதவியாக உத்தண்டசாமியின் பெரிய மீசையோடு ஒரு துணைக் கோடாங்கி இருப்பார். அவரைப் பார்த்தாலே பெண்கள் பயப்படுவார்கள். புரியாமையின் கரைகளில் துவண்டு நிற்கும் குழம்பிய பச்சை மனங்களில் வெகு எளிதாக நோய்க்கூறை இவர்களே முளைக்கவிட்டு வளர்க்கவும் செய்வார்கள்பேயோட்டிகள் பெண்களிடம் நிகழ்த்தும் எல்லாவகையான வன்முறைகளையும் அறிந்த மக்கள் ஒரு சமயம் அவர்களை  ஊரைவிட்டே விரட்டிவிட்டார்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகு பூசாரிக் கவுண்டர் எனக்கு நண்பர் ஆகிவிட்டதால் அந்தப் பகுதியில் பயமின்றி நடமாடத் தொடங்கினேன். நிலவுடைமை சமூகத்தின் ஆதிக்க சாதிகளின் செயலகங்களில் ஒன்றான பீதியூட்டும் பேயோட்டியின் வீட்டை ஊரின் தலைமாட்டில் வைத்திருக்கிறார்கள். நல்ல வேளையாக பக்கத்திலேயே உத்தண்டசாமியும் இருந்ததால் பல பெண்கள் அவரைக் கும்பிட்டு, வெள்ளி செவ்வாய்களுக்கு விளக்குகள் போட்டு (இதுவும் கூட ஒரு கூட்டு மனநோய் அல்லவா?) மன நோயாளிகளாக மாறாமல் தற்காத்துக் கொண்டார்கள். அண்மையில் ஊருக்குச் சென்றிருந்தபோது கோவிலுக்குப் பக்கத்திலிருந்த நிலங்கள் பிளாட்டுகளாகி இரண்டு மூன்று வீடுகள் கூட முளைத்திருந்தன. அந்தக் கோடாங்கி இருந்த பகுதியில் சிறுவர்கள் மும்மரமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். கோவிலைச் சுற்றி இருந்த மாயத்திரை எப்பொழுதோ விலகியோடிவிட்டது.

               கோவிலின் வாசலில் ஊர்ப்பாதை இரண்டாகப் பிரிகிறது. இடதுபுறம் மேல்சாதியினர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் வலதுபுறச் சாலை ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து கண்மாயின் வால்ப்பகுதியைத் தொட்டு பின் ஊர் சுடுகாட்டையும் கடந்து புதூருக்குச் செல்கிறது. முற்பகுதியில் ரெட்டியார், செட்டியார் கோனார் மற்றும் நாயக்கர் வீடுகள் இருக்கின்றன. வடமேற்குப் பகுதி நாடார்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததுகோனார்-செட்டியார்-தெலுங்கு ஆசாரி வீடுகளின் நடு நாயகமாக ஊரின் கணக்குப் பிள்ளை எனப்படும் கர்ணம் அவர்களின் வீடு இருந்தது. பிள்ளைவாள் ஒற்றை வீட்டில் வாழ்ந்தபடி ஊர் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்கிறது. சாதியம் பற்றிய பல புதிய புரிதல்களை நாம் தொடங்க வேண்டி இருந்ததைச் சுட்டும் விஷயம் அது. அசலாக அரசு என்ற ஒன்று, பெரும் அதிகாரங்களோடு, இருப்பதை அவ்வப்பொழுது ஞாபகப்படுத்துபவர்களாக  கிராமமுன்சீப், கணக்குப்பிள்ளை, தலையாரி என்னும் மூவர் குழு இருந்தது. நான் கல்லூரியில் சேர்ந்தபோது கிராமமுன்சீப்பிடம் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு நான் அடைந்த சிரமங்கள் கொஞ்சமில்லை, அழ அழ வைத்துத்தான் கொடுப்பார். மகாக் கேவலமாக இருக்கும். இதைவிட இவருக்கு அடுத்தபடியாக ஆர்.. பிறகு தாசில்தார். விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தில் பழியாய்க் கிடந்துதான் ஒவ்வொரு முறையும் சர்டிபிகேட் மற்றும் ஸ்காலர்ஷிப் பாரத்திலேயே கையெழுத்து எல்லாம் வாங்க வேண்டும். எஞ்சினீரிங் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட முடியவே முடியாது என்று முன்சீப் மறுத்துவிட்டார். ஒரு கூலிக்காரப் பயலோட மகன் எஞ்சினீர் ஆவதா என்று உறுமினார். பின் எனது பள்ளியின் தையல் ஆசிரியர், மற்றும் ஊரின் மைனர்கோனார் போன்றவர்களின் தலையீட்டால் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதிக்கு முதல் நாள் கையொப்பம் இட்டார். அன்று அந்தப் பெரிய காரவீட்டின் வெளிச்சந்தில் காத்துக் கிடந்த கணங்களில் அதிகாரத்தின், சாதியத்தின் கோரமுகங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். இப்பொழுது முன்சீப், கர்ணம் இரண்டு பதவிகளும் இணைக்கப்பட்டு வி... என்னும் பதவி உருவாக்கப்பட்டு அவர்களுக்குத் தனி அலுவலகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வடிவம் மாறியிருப்பினும் இளைஞர்கள் இப்பதவிகளில் இருந்தபோதிலும் நிலைமை ஓரளவுக்கு மட்டும் தான் சீரடைந்திருக்கிறது. அதே சாதியமும் அதிகாரப்போக்கும் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. கம்ப்யூட்டர் பட்டா வழங்குதல், மனுக்களின் மேல் 15 நாட்களுக்குள் தீர்வு காணுதல் போன்ற எப்பேர்ப்பட்ட நவீன ஏற்பாடுகளையும் இவர்கள் எளிதாக மீறிவிடுகிறார்கள். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் கையூட்டு கொடுக்க வேண்டியிருக்கும் வழக்கம் ஒழியவே ஒழியாது என்பதை அண்மையில் எங்கள் நிலங்களை அளவீடு செய்வதற்காக ஊருக்குச் சென்றபோது நானே அனுபவித்தேன்.

              இதையடுத்து  வலதுபுறம் முழுவதும் சுமார் 200 வீடுகள் கொண்ட கவுண்டர்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. ஏதோ ஒரு சமயத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து வந்து தங்களது கடுமையான உழைப்பின் மூலம் இந்த ஊரை நிர்மாணித்து இதர சாதியனரையும் குடியேற அனுமதித்து ஓர் இணக்கமான பொதுவாழ்வை உண்டாக்கியிருப்பது பெரும் சாதனை என்றுதான் கூற வேண்டும். வேலமரக் காடுகளை அழித்து, வறண்ட நிலங்களை சீர்திருத்தி விளைநிலங்களாக மாற்றி தங்களது சொந்தத் தொழிலான ஆடுவளர்ப்பை கோனார்களுடன் சேர்ந்து சுமார் இரண்டாயிரம் ஆடுகளுடன் கூடிய பெரிய கிடையை உருவாக்கி, கீதாரி முறையையும் இணைத்து, பசியற்ற அன்றாட வாழ்வை ஊர் முழுதுக்கும் சாத்தியப்படுத்தியிருக்கும் கவுண்டர் இனப் பெருமக்களுக்குத் தலை வணங்குகிறேன். கவுண்டர்களின் குடியிருப்புப் பகுதி ஊருக்குள்ளேயே இன்னொரு ஊர் என அவர்களுக்கெனெத் தனிக்கிணறு, தனிக்கோவில் என்று இருக்கும். வீடுகளின் கட்டமைப்புகள் கூட மிக வித்தியாசமாக இருக்கும். ஆடுமாடுகள், கோழிகள், வான்கோழிகள், நாய்கள் சூழ மிக இயல்பாகக் பெண்களும் குழந்தைகளும் குழுமியிருப்பார்கள். உரலில் ஏதாவது இடித்தபடி, ஆட்டுரலில் பெரிய குழவிகளை இருவர் சேர்ந்து தள்ளி மாவாட்டியபடி, தவசத்தை அம்பாரமாகக் குவித்து புடைத்தபடி, கன்னடத்தில் எதையாவது உரக்கப் பேசியபடி ஒரு ஜீவன்மிக்க கதகதப்பான தெருக்களாக அவை இருந்தன. எனக்கு அந்தத் தெருக்களுக்குள் செல்வதற்கு மிகக் கூச்சமாக இருக்கும். எல்லா வீட்டிலிருந்தும் கூப்பிடுவார்கள். மருமகனே வாங்க, தம்பி வாங்க, மாப்ள வாங்க என அவர்கள் காட்டும் பிரியம் அளவிடமுடியாதது. நான் குட்டிப்பையனாக இருந்தபொழுது வடகத்தியம்மன் சாமியின் வாரிசாக இருந்த வெயிலுகந்தம்மன் வீட்டுக்கு அடிக்கடி செல்ல நேரிடும். விளக்கேற்றும் மாலைப் பொழுதுகளில் அவர் எல்லாவகையான நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு வேப்பங்குழை கொண்டு மந்தரித்தே சரிசெய்துவிடுவார். ஒரு சிறுதும்மல் போட்டாலும், காய்ச்சல் அடித்தாலும் முதல் வைத்தியம் அந்த அம்மாவிடம் மந்திரிப்பதுதான். சாணம் பூசிய ஒட்டு மண்திருணையில் உட்கார்ந்தபடி வேப்பிலைக் கொத்தால் தலையையும் முகத்தையும் பின் மார்பையும் வயிறையும் கால்களையும் வருடியபடி உஸ் உஸ்ஸுஸ் என்று எதையோ முணுமுணுத்தபடி மந்திரிப்பார். மந்திரிப்பு முடிந்ததும் தயாராக வைத்திருக்கும் செம்பிலிருந்து கொஞ்சம் குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து திருநீறு பூசிஒன்னும் செய்யாது போகலாம்என்று கூறிவிடுவார். எப்படியும் வாரம் ஒருமுறையாவது அந்த சாமியார் எவ்வாவைப் பார்த்துவிடுவேன். அந்த வேப்பிலைக் கொத்திலிருந்து வீசும் ஈரச்சிறுகாற்றில் மெய்மறந்து நின்ற மாயக்கணங்கள் இனி ஒருபோதும் எனக்குக் கிட்டப்போவதில்லை. அதே தெருவில் அதிகாலைகளில் பார்வதியம்மா என்பவர் சுடுகிற ஆமைவடைகள் பழைய சோற்றுக்கென்றே பிறந்தவைகள் எனலாம். அந்த சுவைக்கு ஈடான ஒரு ஆமைவடையை நான் இன்று வரை சாப்பிட்டதில்லை. அதே கடையில் மதிய வேளைகளில் கிடைக்கிற ஓமப்பொடியும் மிக முக்கியமான தின்பண்டம். ஓமப்பொடி என்ற பெயரில் இன்று நகரங்களில் விற்கிற ஓமப்பொடிகளுக்கும் கவுண்டர்தெரு பார்வதியம்மா சுடுகிற ஓமப்பொடிக்கும் ஏணி வைத்தாலும் எல்லாது. பருத்தி, உளுந்து எல்லாம் கொடுத்து வாங்குகிற மிகமுக்கியமான வாடிக்கையாளராக நான் இருந்தேன். வழியில் யாராவது கூப்பிட்டால் ஒரே ஓட்டமாக ஓடி வந்துவிடுவேன். வளர்ந்தபிறகு, மிகச்சிறிய வயதிலேயே வான்படையில் சேர்ந்துவிட்ட எனது மிக நெருங்கிய உயர்நிலைப்பள்ளித் தோழன் ஒருவனின் வீட்டிற்கு செல்லத் தொடங்கி, முழுத் தெருவுடனும் நட்பு கொள்கிறவனாகிவிட்டேன். கவுண்டர் பகுதியின் நடு நாயகமாக இருந்த பொதுக்குளுமை ஒரு பெரிய ஆச்சர்யம். எல்லாக் குடுபங்களும் தங்களது தானியங்களை அளந்து ஒன்றாகக் கொட்டி சேமித்து வைக்கும் அதிசயம் ஓர் இனம் முழுவதிற்கான திடமான ஒட்டுறவை வளர்த்திருந்த அந்த இனப்பெரியவர்களின் நோக்கம் மிகப்பெரியது. ஒரு தேசம் முழுவதற்கும் தேவையான ஒற்றுமையின் நுண்விதைகளை அந்தச் சிறிய கிராமமே வழங்கிவிட முடியும்.

                 கவுண்டர்கள் கிராமமாகவே அறியபட்ட வெம்பூருக்கு பஞ்சாயத்துத் தலைவர் பதவியை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரிய கவுண்டர் குடும்பமேஅன்னபோஸ்டாகவைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீடே பிரசண்டுக் கவுண்டர் வீடு என்றே அறியப்பட்டது. உடல் முழுவதும் வெள்ளை முடியோடு கடுக்கன் அணிந்த சதா சிரித்தன முகத்துடன் கூடிய பெரிய கவுண்டரை மிகச் சிறிய வயதில் பார்த்திருக்கிறேன். ஊரின் மனிதர்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், செடிகொடிகள், தெருக்கள், வீடுகள், மரங்கள், கிணறுகள் என எல்லாவற்றின் மேலும் அன்பு கொண்ட அவ்வளவு நியாயமும் தர்மமும் நிறைந்த மனிதரை இனி நாம் ஒரு போதும் எந்தக் கிராமத்திலும் காணவே முடியாது. எனவேதான் மிக வெளிப்படையான சாதிவாரியான குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்தாலும் எல்லா சாதியினரும் ஒருவருக்கொருவர் இணங்கிப்போகிற பகையுணர்வற்ற ஒரு பொதுவாழ்வை எட்ட முடிந்தது. அவர்கள் காலத்திய நியாயத்திலிருந்து அவர்கள் வழுவாமல் வாழ்ந்ததே சாதனைதான். நம் காலத்து நியாயங்களை கடந்த காலத்தில் தேடுவதில் அர்த்தமில்லை. பெரிய கவுண்டர் தனது 102வது வயதில் இறந்ததை ஏற்றுக் கொள்ளவே ஊருக்குப் பல காலம் ஆகியது. அனைத்து சாதியனரின் அன்பிற்கும் உரியவராக அவர் நடமாடித் திரிந்தது இன்று யோசிக்கையில் ஒரு பேரதிசயம் போலவே இருக்கிறது.

                 இந்த மேல் சாதியினரின் குடியிருப்புப் பகுதிகளுடன் சம்பந்தமில்லாதவாறு மிகக் கவனமாக தேவர்களின் குடியிருப்புகளும் ஆதி திராவிடர்களின் குடியிருப்புகளும் ஊரின் கடைசியில் கண்மாயின் ஓரம் இரு எதிரெதிர் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டன. தேவர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் நடுவிலான பகைவிசையை சரியானபடி பராமரிக்கும் விதத்தில் இருபகுதிகளுக்கும் மத்தியப் பகுதி ஊர் அம்பலகாரர் குடும்பத்தினருக்கும், நால்வகை ஆசாரி ( தச்சர், கொல்லர், பொற்கொல்லர், வேளாண்கருவிகள்) வீடுகளுக்கும் ஒதுக்கப்பட்டது. அம்பலகாரர் வீட்டைத் தாண்டி ஆதிதிராவிடர்கள் ஒருபோதும் தேவர் பகுதிகளுக்குச் செல்ல முடியாது. ஆசாரி வீடுகளிடம் மட்டும் தாயாதி உறவுகள் இருந்தது. ஆசாரி வீட்டில் யாராவது இறந்துவிட்டால் ஆதிதிராவிடர்கள் பகுதியிலிருந்து பச்சை (கோடித்துணி) தரும் வழக்கம் இருந்தது. தேவேந்திர குலத்தார், முக்குலத்தார், நாடார்கள், ஆசாரிகள், பிள்ளைமார்கள், தமிழ் செட்டியார்கள் முதலிய, முழுக்க முழுக்க தமிழ் பேசுகிற சாதியினர் எல்லோரையுமேஆதிதிராவிடர்கள்என்றே அழைக்கலாம். வெம்பூர் கிராம அமைப்பின் மூலமே, ஊரை நிர்மானித்த கவுண்டர்கள் மிகக் கவனமாக தேவர்-ஆதிதிராவிடர் உறவில் எந்த வெடிப்பும் நேர்ந்துவிடாதவாறு பார்த்துக் கொண்டார்கள். எந்த ஒரு பொதுத்தேவைக்கும் இருபிரிவினரும் சந்தித்துக் கொள்ளவே தேவையில்லாத அற்புதமான அமைப்பியல்என்றும் கூடக் கருதலாம். நிலத்தில் இறங்கி வேலைபார்க்கும் கூலிகளாக ஆதிதிராவிடர்களையும் பயிர்க்காவல், ஊர்க்காவல், தலையாரி வேலைகளுக்கு தேவரினத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.  

              முதலில் தேவர் பகுதிக்குள் நுழையலாம். சுமார் 30 வீடுகள் கொண்ட இந்தப் பகுதியின் தலைவராக அதிகாரித் தேவரின் வீடு இருந்தது. நல்ல பெரிய கார வீட்டில் இருந்தார்கள். ஏழு ஜோடி மாடுகள் கட்டுகிற பெரிய தொழு இருந்தது. பெரிய விவசாயி. கழுத்து வழியாக அணிகிற பட்டன் இல்லாத ஒரு நீலக்கலர் சட்டையை அணிந்தபடி தனுஷ்கோடி விலாஸ் சுருட்டைப் பிடித்தவாறு உண்மையில் ஒரு படையதிகாரி போலவே இருந்தார். காட்டு வேலைகளையெல்லாம் அவரது தம்பிகள் பார்த்துக் கொள்வார்கள். சமூகப் பிரச்னைகள், வீட்டுப் பிரச்னைகள் எதிலும் தலையிட்டுக் கொள்ளாமல் அலட்டிக் கொள்ளாமல் வழ்ந்தார். வீட்டை விட்டு அதிகம் வெளியே வருவதில்லை. ஆனால் பெரிய கவுண்டர் இடுகிற கட்டளைகளை சப்தமில்லாமல் செயலாக்கம் செய்கிற அறிவிக்கப்படாத தளபதியாக இவர் இருந்திருக்கிறார். மற்ற குடும்பங்களில் ஒரு நான்கைந்து குடும்பங்களுக்கு மட்டுமே நிலம் இருந்தது. மற்ற எல்லோருமே கடினமான உடலுழைப்பைத் தரவேண்டிய கூலிவேலைகள் செய்துவந்தார்கள். சிலர் கவுண்டர்களைப் பார்த்து ஆடுகள் வளர்க்கவும் செய்தார்கள். எனது நண்பன் பாண்டியின் குடும்பம் முழுவதுமே ஆடுவளர்ப்பில் ஈடுபட்டிருந்தது. ‘இதென்னப்பா தேவமார் வீடு போலவா இருக்கு?’ என்று பலரும் பேசுவதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்தஅவமானம்தாங்க முடியாமல் பாண்டியின் மூத்த அண்ணன் மட்டும் தனிக்குடித்தனம் போய் தொடர்ந்து கிணறு வெட்டுகிற வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தார். எல்லா சாதிகளிலும் இப்படி ஆடு வளர்ப்பில் கலந்து கொண்ட குடும்பங்கள் ஒரு ஸ்திரத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமாக்களில் நாம் பார்க்கிற தேவர்கள் மாதிரி எங்கள் ஊரில் ஒருவர்கூடக் கிடையாது. சண்டியர் என்று எங்கள் ஊரில் ஒருவரும் இல்லை. இன்று வரை ஒரு கொலைகூட நடக்காத சாத்வீகமான கிராமம் என்று மார்தட்டிக் கொள்வார்களே தவிர பெரிய பட்டாக் கத்தியை சட்டைக்குள்ளிருந்து உருவுவதை நான் பார்த்த்தில்லை. பஞ்சாயத்துக்களில் வம்புவழக்குகளில் ஓங்கிப்பேசுகிற ஒரு சித்தப்பா இருந்தார். அவர் கூட முழுநேர மாட்டுத் தரகராகத்தான் இருந்தார். தலையாரிக் குடும்பம் ஒன்றும் இருந்தது. தலையாரி மாமா மாதிரி ஒரு மென்மையான மனிதர் ஊருக்குள் வேறு யாரும் கிடையாது. ஆனால் அவர் சொல்வதைக் கேட்காதவர்கள் என்று ஊரில் யாரும் கிடையாது. மர்மம் என்ன என்பதை நாம் ஊகிக்கவே முடியாது. காவல்காரச் சித்தப்பாக்கள் இருவர் இருந்தார்கள். பயிர்கள் முளைத்து, விளைந்து அறுவடைக்கு வருகிற ஐப்பசி முதல் தை வரைக்கும் விளைச்சல்கள் வீடு வந்து சேர்கிறவரை மட்டுமே அவர்கள் காவல்காரர்களாக வேல்கம்பைத் தூக்கிக் கொண்டு அலைவார்கள். மற்ற நாட்களில் பஞ்சாயத்துக்குக் குற்றவாளிகளை அழைத்துவருதல் போன்ற சிறுசிறு வேலைகளை மட்டும் செய்வார்கள். எனக்குத் தெரிய சாதிய மோதல்கள் எதுவும் இதுவரை நடந்ததில்லை. ஆதிதிராவிடர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் ஒருபோதும் பகையுணர்வு தோன்றியதில்லை. இணக்கமான வாழ்வு எங்கள் வெம்பூரில் எப்படியோ சாத்தியப்பட்டிருக்கிறது

                 அடுத்ததாக ஆதிதிராவிடர்கள் பகுதிக்கு வருவோம். அனேகமாக இந்தப் பகுதியில் சாதியம் பற்றிய ஒரு முழுமையான புரிதலை நாம் அடைய முடியலாம். ஆதிதிராவிடர்களில் மொத்தம் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. முக்கிய கிராமத்தின் தென்கிழக்கில் தமிழ் பேசும் பள்ளர்கள். சுமார் முப்பது குடும்பங்கள் மட்டுமே உண்டு. குட்டிக் குட்டி இத்தினியூண்டு வீடுகளில் ஒரு பெரிய குடும்பமே இருக்கும். பெரும்பாலும் மண்ணால் அவர்களே கட்டிய குடிசைகள் தான். ஓலைக்கூரை அல்லது கம்பந்தட்டைக் கூரையாக இருக்கும். கம்பந்தட்டை வீடுகளில் ஒரு அற்புதமான குளிர்ச்சி இருக்கும். இந்த வீடுகளில் மூலைப்பகுதியை, மழை நீர் ஒழுகாமல் இருப்பதற்காக தட்டைகளைக் கொண்டே ஒரு ஜடைப்பின்னல் அமைப்பால் வேய்ந்திருப்பார்கள். எங்கள் தோட்டத்துக்கு பங்குக்காராக (பங்குக்காரர் என்றால் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு விளைச்சலில் ஏழரைப் பங்கைப் பெற்றுக் கொள்வார்கள்) இருந்த ஊர்காலன் அய்யா வீட்டுக்குள் போய் இருக்கிறேன். முதலில் கவனித்தது தலையைக் குனிந்து செல்ல வேண்டிய தாழ்வான வாசல்தான். குனிந்தபடியே உள் நுழைந்தால் சாணி மெழுகிய ஒரு திண்ணையுடன் கூடிய ஒரே அறை. அதற்குள்ளும் ஒரு சிறிய மச்சு. ஒன்றிரண்டு நார்ப்பெட்டிகள். ஒரு சுவரோரம் முழுவதும் அடுக்குப் பானைகள். ஓரத்தில் திறந்த வெளியுடன் கூடிய அடுப்பங்கரை. அப்புச்சிய ஏன்யா கூட்டீட்டு வந்தீங்க என்று ஊர்காவலனின் மனைவி பதறிப் போனார். அடப்போடீ என்று அதட்டிவிட்டார். சொம்ப விளக்கி தண்ணி குடுடி என்றார். இதென்ன அக்குரமமா இருக்கு. பெரியாத்தாவுக்குத் தெரிஞ்சா ஓம் முதுகுத்தோல உரிச்சிடுவாங்க என்றார். அடப் போடி சின்னப்புள்ளையப் பயப்பட வச்சிடாத, நீங்க வாங்க அப்புச்சி என்று என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்துவிட்டார். ஊர்க்காவலனும் அவரது மனைவியும் பெரும்பாலும் எங்க தோட்டத்திலேயே உழைத்தார்கள். கொஞ்சங்கூட விவசாயம் இல்லாத வறண்ட காலங்களில் கல்லுடைப்பது போன்ற துட்டு கிடைக்கிற வேலைகளுக்குப் போவார்கள்கௌரவமானதொரு  பண்ணையடிமை அமைப்பு தான், வேறென்ன?

              எதற்காக இவர்கள் இப்படி பயப்படுகிறார்கள் என்று கொஞ்சம் பெரிய பையனாக ஆகியபிறகு பலரிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டது: வன்முறை, அளவே இல்லாத விதம்விதமான வன்முறை. பல ராஜாக்களின் படை வீரார்களாக பலியிடப்பட்ட பிறகு, சிறுபான்மையினராக மறிவிட்ட இவர்கள் மீது பெரும்பான்மையினராக மாறிவிட்ட மேல்சாதியினர் செலுத்திய வரைமுறையில்லாத வன்முறைதான் காரணம் என்கிறார்கள். வீடுகளை மொத்தமாகத் தீயிட்டுக் கொளுத்துவது, பொது இடங்களில் தூணில் கட்டி வைத்து அடிப்பது, உயிருடனேயே ஆட்டுக்குத் தோலை உரிப்பது போல தோலை உரித்து சாகவிடுவது, தலை மட்டும் தெரிவது போல புதைத்து வைப்பது, குதம் வழியே வேல்கம்பை ஏற்றும் கழுவேற்றம் என்று அளவற்ற வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அப்படியே கூனிக் குறுகிப் போய்விட்டார்கள். ஏதோ ஒரு தலைமுறையில் உண்டாகிய இந்த பயம் பல தலைமுறைகளையும் கடந்து, 65 ஆண்டுகள் சுதந்திர மக்களாட்சி நடந்து முடிந்திருக்கும் இன்றும் தொடர்கிறது.

               எங்கள் ஊர்காவலருடையதைப் போன்ற ஒன்றிரண்டு பங்குக்குப் பார்க்கிற குடும்பங்கள் தவிர, மற்ற எல்லாருமே தினசரிக் கூலிகளாகத்தான் இருந்தார்கள். சொந்த நிலங்கள் கொண்ட வசதியான குடும்பங்கள் இரண்டே இரண்டு இருந்தன. ஒன்று அந்தப்பகுதியின் தலைவரது வீடு. இன்னொன்று கொழும்புகாரவுக வீடு. அந்தப்பகுதியின் பல கிராமங்களின் தேவேந்திர குலத்தார்களுக்கு தலைவராகவும் வெம்பூர் பஞ்சாயத்து போர்டு நிரந்தர உறுப்பினராகவும் பலமுறை துணைத்தலைவராகவும் இருந்தவரின் குடும்பம் எனக்கு மிக நெருங்கிய குடும்பமாக இருந்தது. ‘சமையலுவாய்யா என்று சதா வெற்றிலை மெல்லும் வாய் நிறைய்யக் கூப்பிடுவார். இவரது பிள்ளைகள் எனது மிக நெருங்கிய நண்பர்களாக இன்றுவரை இருந்து வருகிறார்கள். அது போலவே எல்லோருடனும் அன்பு கொள்வதைத் தவிர வேறு உறவே தெரியாத கொழும்புக்காரவுக குடும்பம். அய்யா வாங்க அம்மா வாங்க என்று வாய் நிறைய அழைக்கும் அந்தத் தம்பதிகளின் வீடு, கவுண்டர் பகுதியை இணைக்க முடியாதபடி வைக்கப்பட்ட தடுப்புச்சுவருக்குள் பத்திரமாக இருந்தது. யாரும் எட்டிக்கூடப்பார்க்க முடியாத உயர்ந்த அந்தச் சுவரை தீண்டாமைச் சுவர் என்று சந்தேகம்கூடக் கொள்ள முடியாதவர்கள். இவர்களது பிள்ளைகள், எனது மிக நெருங்கிய நண்பர்கள்எல்லோரும் படித்து இன்று பெரிய பெரிய உத்தியோகங்களுக்குச் சென்றுவிட்டார்கள்.

             இது போக ஊர்க்குடும்பர் அல்லது மடைக்குடும்பர் என்று அழைக்கப்படும் வயல்பகுதிக்கு தண்ணி பாச்சுகிற ஒரு முக்கியமான குடும்பமும் இருந்தது. கண்மாய் நிரம்பியிருக்கிற நாட்களில் வெறும் 24.5 ஏக்கர் ஆயக்கட்டு கொண்ட எங்கள் சிறிய வயற்பகுதி முழுமைக்கும் இந்தக் குடும்பத்தாரே மடை திறந்து நீர் பாய்ச்சுவார்கள். அது போக மொட்டையிருளப்பர் கோவில் பூசாரியாகவும் இவர்களது குடும்பத்தார்களே இருப்பார்கள். மொட்டையிருளப்பர்  எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கண்மாய்க்கரைக்குள் பெரிய புளியமரத்தோரம் வட்டக் கல்வளையத்துக்குள் நிற்கிறார். இவருக்கு வேண்டுதல்கள் என்று எல்லா சாதியனருமே மட்டுமே பொங்கலிடுவார்கள். மடைக்குடும்பர் அவரே தனியாக ஒரு பொங்கலிட்டு வாயில் வெள்ளைத்துணியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்து திருநீறு பூசிவிடுவார். நாங்கள் பொங்கல் எங்கே கிடைக்கும் என்பதிலேயே கவனமாக இருப்போம். திருவிழா என்று எதுவும் கிடையாது என்பதால் சாதியப் பொருமல்களுக்கு வழியில்லை. இருளப்பருக்கு முன்பு இருக்கிற கழுகுமரத்தைக் கண்டால் தான் பயமாக இருக்கும். சமயங்களில் அதில் சேவல் ஒன்றைப் பலியிடுவதைப் பார்க்க எப்படியோ இருக்கும். இதுவே ஆளுகள் என்றால் எப்படி இருக்கும் என்று நாங்கள் மெல்ல சப்தம் போடாமல் பேசிக்கொள்வோம்.

               ஊரை கீழ்-மேலாகப் பிரிக்கிற புதூர் சாலைக்கு தென்புறம் மிக ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதிகளாக தமிழ் பேசுகிறபறையர்பகுதியும் தெலுங்கு பேசுகிறசக்கிலியர்பகுதியும் இருக்கிறது. இருபகுதிக்கும் நடுவில் ஒரு மண்சுவரால் ஆகிய சர்ச் இருந்தது. இந்தச் பிறகு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட, பல அற்புத சிற்பங்களுடன் கூடிய ஒரு புதிய காங்கிரீட் கட்டிடத்திற்கு மாறிவிட்டது. அதன் திறப்புவிழாவில் எனது நாடகம் ஒன்று கலந்து கொண்டது. சுமார் பத்தே கிறிஸ்துவக் குடும்பங்கள். இவர்கள் பெரும்பாலும் நாடார் தோட்டங்களில் வேலை பார்த்தார்கள். அவர்களது வீட்டில் மரணச் சடங்குகள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள். பிறகு ஊரில் யார் கூப்பிட்டாலும் உழவு அடித்த புத்தம்புது  நிலத்தில் பாத்தி கட்டுவது, காலாங்கரை கட்டுவது போன்ற மண் சம்பந்தமான கூலி வேலைகள், ஊரில் புதிதாகத் தோன்றிய கல்வெட்டாங்குழிகளில் கல்லுடைத்தல் போன்ற வேலைகளையும் செய்தார்கள். இவர்கள் வீட்டுப் பெண்கள் பனையோலை, பனமட்டை, கீற்றுகளைக் கொண்டு அழகழகான சுளகுகள், கொட்டான்கள், பெட்டிகள், கடகாப்பெட்டிகள், விசிறிகள் செய்வதில் மிகத் திறமையானவர்களாக இருந்தார்கள். அந்தப் பனைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. தங்களது கலைத்திறன் காரணமாக ஊரின் எல்லாப் பெண்களும் விரும்புகிற மகாமனுஷிகளாக அவர்கள் இருந்தார்கள். ஒருவகையில் அந்தப்பகுதி ஆண்கள் வேலை செய்வது என்பது அவ்வளவு முக்கியமில்லாத விஷயமாக இருந்தது.

                  வலதுபுறம் உள்ள சுமார் இருபது சக்கிலியர்கள்வீடுகள் ஊரின் இயங்குதலில் மிக முக்கிய பங்கு கொண்டிருந்ததை எவரும் அறிய மாட்டார்கள். தோட்டக் காடுகளில் கமலை இறைக்கிற கூனியைத் தைத்துக் கொடுப்பவர்கள் இவர்கள் தான். பலருக்கும் செருப்பு தைத்துக் கொடுப்பார்கள். பிணம் வேகும் போது வெட்டியான்களாக செயல்படுவார்கள். அறுவடை முடிந்து களத்துக்கு வரும் கருதுகள், பயறுகள் எல்லாவற்றையும் அடித்துத் தூற்றி வீடு கொண்டுவந்து சேர்ப்பவர்கள் இவர்கள்தான். ஊருக்கே பெருமை சேர்க்கிற வெம்பூர் மேளக்குழுவினரும் இவர்கள் தான். வேலுவின் பெரிய தவிலும் அழகிரியின் நாதஸ்வரமும் அந்தப் பகுதிக் கிராமங்களில் மிகப் பிரபலம். அழகிரி அவர்கள் தருகிற தேதிக்குத் தக்கபடி கல்யாணத் தேதியைக் குறிப்பது அந்தப்பகுதியில் பழகிப் போனது. ‘சிங்கார வேலனே’ பாட்டும் ரெட்டியார் காவடிச் சிந்தும், சாமி ஊர்வல மல்லாரியும் வாசிக்காத நிகழ்ச்சி இருக்காது. இருக்கன்குடி மாரியம்மன் ஆடிக் கடைசி வெள்ளித் திருவிழாவில் அழகிரி-வேலு நையாண்டி மேளத்திற்கு ஆடாத கரகங்கள் அந்தப் பகுதியில் எங்கும் இல்லை.  
                      எனது கல்லூரி நாட்களில் விடுமுறை தினங்களின் மாலைப்பொழுதுகளில் பெரும்பான்மையை இந்தப் பகுதிகளில் தான் கழித்தேன். அவர்கள் படிக்க வேண்டியதிருப்பதின் அவசியத்தையும் சாதியம் பற்றிய உரையாடலையும், கொஞ்சம் இடதுசாரி மனோபாவத்தையும் பல இளைஞர்களிடம் என்னால் உருவாக்க முடிந்தது. மாலை நேர வகுப்புகளை ஏற்பாடு செய்தோம். எல்லா சாதியினரிடமிருந்தும் ஒன்றிரண்டு நட்பு இளைஞர்களைப் பழக்கப் படுத்திக் கொண்டு ‘பாரதி இளைஞர் மன்றம்’ ஆரம்பித்தோம். வீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூல் செய்து ஒரு சிறிய படிப்பகத்தையும் ஆரம்பித்தோம். எல்லாத் தினசரிகளையும் வார மாத இதழ்களையும் வாங்கிப்போட்டோம். மெல்ல மெல்ல ஊரில் ஒரு புதிய கூடுதலை எங்களால் உருவாக்க முடிந்தது. நாங்களே கல் மண் எல்லாம் கொண்டு வந்து, மேல ஊருணியில் இருந்து மரம் வெட்டிக் கொண்டுவந்து படிப்பகம் கட்டி எங்கள் பள்ளி ஆசிரியரைக் கொண்டு திறப்பு விழா நடத்தினோம். அங்கேயே மாலை நேர இரவு வகுப்புகளையும் ஆரம்பித்தோம். ஏதோ எல்லோரும் படிக்க வேண்டும் அது ஒன்று மட்டும்தான் ஒட்டுமொத்த கிராமத்தின் வளர்ச்சியையும் சாதியம் ஒழிவதற்கான வாய்ப்புகளை, சூழலை உருவாக்கும் என்று  நம்பினோம்.

                     எங்கள் ஊரிலும் இரட்டைத் தம்ளர் விவகாரம் இருந்தது. நல்ல வேளையாக சிரட்டையில் தண்ணீர் ஊற்றுவது, மேல்சாதியினர் தெருக்களில் செருப்புப் போடக்கூடாது போன்ற காட்டுமிராண்டிக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் இந்த இரட்டைத் தம்ளர் விவகாரம் எங்களைக் கொஞ்சம் உறுத்தத் தொடங்கியபோது ஒரு நாள் துணிந்து ஒரு காரியம் செய்தேன். ஒரு தலித் தோழரை அழைத்துக்கொண்டு அந்த டீக்கடைக்கு டீ அருந்தச் சென்றேன். வழக்கம் போல அவருக்கு அந்தக் கண்ணாடித் தம்ளரிலும் எனக்கு எவர்சில்வர் தம்ளரிலும் டீ வழங்கப்பட்டது. நாங்கள் இருவரும் டம்ளர்களை மாற்றிக் கொண்டோம். அண்ணே வேண்டாம்னே என்று பயந்தார் அந்தத் தம்பி. நான் பேசாம இருப்பா என்று கூறிவிட்டு மடக்மடக்கென்று டீயை அருந்த ஆரம்பித்தேன், கடைக்காரர் எப்படியோ பார்த்துவிட்டார். என்மேல் நன்மதிப்பும் அன்பும் கொண்ட அவர், ‘தம்பீ’ நீங்க செய்றது நல்லால்ல. ஊர்ல யாராச்சும் கேட்டா நான் உங்க மேலதான் தப்புன்னு சொல்லிடுவேன் என்றார். பரவால்ல எல்லாம் நான் பாத்துகுறேன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்கு முன்னாலேயே அந்த இரண்டு தம்ளர்களையும் தூக்கி வெளியே வீசி எறிந்துவிட்டார். மெல்ல செய்தி ஊருக்குள் பரவியது. நிறையப் பேர் . தம்பி என்னப்பா நடந்துச்சுன்னு கேட்டுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போனார்கள். எனக்கு உள்ளுக்குள் ஒரு சிறிய பயம் இருந்தது. இரவில்  நடந்த ‘பாரதி மன்றக் கூட்டம், நான் செய்ததில் தவறில்லை என்பதையும் இன்று முதல் இரட்டைத் தம்ளர் முறை நம் ஊரில் கிடையாது என்றும், ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இரவு கூட்டம் முடிந்த பிறகு எனது வீட்டிற்குச் செல்லாமல்  கண்மாய்க் கரைக்குப் போனேன். எனக்குத் துக்கம், சந்தோஷம் எது நடந்தாலும் கண்மாய்க்கரையில் அதன் கடைசி கரைப் பத்திரகாளியம்மன் கோவில்வரை நடந்து திரும்பி, புதிய மடைப் புளியமரத்தடியில் ஒரு அரைமணி நேரம் உட்காரும் வழக்கத்தை வைத்திருந்தேன். முழுக்கண்மாய் நீரையும் சிலுப்பியபடி வரும் ஈரக் காற்று எல்லாவற்றையும் போக்கி மனசை அமைதிப்படுத்திவிடும். ஆலமரங்களைக் கடந்தபோது யாரோ கூப்பிடுவது போல இருந்தது. திரும்பியபோது ஒரு பெரிய கருங்கல் என்னை நோக்கி முழுவேகத்தில் வந்தது. நல்ல வேளையாக என் கணுக்காலை மட்டுமே அதனால் உடைக்க முடிந்த்து. அம்மா என்று கத்தியபடி உட்கார்ந்துவிட்டேன்.

                 இப்படி வெளிப்படையான சாதியம் சார்ந்த ஊர்களில் தான்       நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமத்துவபுரங்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. எல்லா ஊர்களிலும் அரசே காலனி வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. காலனி வீட்டு ஆட்கள் என்பதற்கு, தமிழ் அகராதியில் தலித் குடியிருப்பு என்று பொருள் எழுதவேண்டி இருக்கிறது. சமீபத்தில் மதுரை நகரில்  முதல்நிலை தலித் அதிகாரி நண்பர் ஒருவர் தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, என்ன செய்தாலும் நான் எஸ்.சி என்னும் இந்தக் காம்ளக்ஸ்  போகவில்லையே என்றார். என்னை ஒரு எஸ்.சி.யாகத் தானே என்னப் பார்க்கிறார்கள் என்று வேதனைப்பட்டார். இவ்வளவு பெரிய கட்டுரை எழுதிய பிறகும் இந்த சாதியத்தை முற்றிலும் அழிப்பதற்கான வழிகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. எங்கள் வெம்பூரின் பழங்காலப் பெரியவர்களின் அளவற்ற அன்பும், எங்கள் பாரதி மன்றம் போன்றதொரு அமைப்பும் சேர்ந்தால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். நம்பத்தானே வேண்டும்?

19.11.2012

Comments

  1. புறவயமாக அணுகுகிறேன் என்று சொல்லியிருந்தாலும் உணர்வைப் பிரிக்க முடியவில்லை.
    ஏறத்தாழ எல்லோருடைய அணுபவமும் இப்படித்தான் இருந்திருக்கும் குறிப்பாக தலையாரி, முண்சீப் விஷயங்களில் . . .
    ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். நம்பத்தானே வேண்டும் ....
    ஏதாவது நடக்கும் என்று நம்புகிறேன் ..
    நம்பத்தானே வேண்டும் ..
    நடக்கும் அல்லது .
    கடக்கும் ..

    ReplyDelete
  2. ஒரு நல்ல பதிவு. உண்மையான கிராமம் எப்படி சாதி சார்ந்து இயங்குகிறது என்பதனை சமயவேல் நன்றாக
    பதிவு செய்திருக்கிறார். நானும் எங்கள் ஊர் சாப்டூர் என்று இப்படி ஒரு பதிவினைப் போடவேண்டும் என்ற‌
    தூண்டுதலையும், உண்மையான விவரங்களை வெளிப்படையாக எழுதவேண்டும் என்ற தூண்டுதலையும்
    ஏற்படுத்தியிருக்கிற பதிவு. நன்றி , திரு சமயவேல் அவர்களே.
    வா. நேரு .

    ReplyDelete
  3. எல்லோரும் ஊர் பெருமை பேசும் போது நடந்த தீண்டாமை கொடுமை பற்றிய உண்மைகளை எழுதியது அருமை. வாழ்த்துக்கள் சமயவேல்
    மணிகண்டன், மதுரை.

    ReplyDelete
  4. Good.I also belongs to Tuticorin district,Ottapidaram talk.All matters Mr.Samayavel said is true in our district.Still it is happening.I am also an engineer studied in College of engineering -Guindy.But could not do anything for this society.Hope time is the cure for this kind of activities...

    ReplyDelete
  5. மனதை தொட்ட பதிவு...
    ஊர் பெருமை, வரலாறு மற்றும் பல உண்மைகளையும் எழுதியது அருமை. வாழ்த்துக்கள் சமயவேல் ஐயா...
    தீப்பொறி ஆறுமுகம் அவர்களின் மகன் சிவமுருகன், மதுரை.

    ReplyDelete
  6. நல்ல அருமையான பதிவு... வார்த்தைகள் யாவும் அருமை. நானும் உள்ளூர் வாசி ஐயா.... உங்கள் பெயர்

    ReplyDelete

Post a Comment

Popular Posts